எண்பத்தாறில் ஓா் நாள்

எதிலிகளாய் புறப்பட்டோம்

ஈராயிரத்து பதினாறுவரை

எம்துயரம் தீரவில்லை

 

சடசட வெனவே குண்டுகள் பறந்திட

படபட வெனவே  நெஞ்சம் துடித்திட

மளமள வெனவே கிடைத்ததை அள்ளி

தடதட வெனவே ஓடிய வந்திட்டோம்

 

அகதி என்ற பெயா் சுமந்து,

அனுதினமும் நொந்து நின்றோம்

சகதியாய் நிறைந்த போருக்குள்

சடுதியாய் நாம் சிக்குண்டோம்.

 

ஊரான ஊரிழந்தோம்

பாராளும் பண்பிழந்தோம்

சீரானவாழ் விழந்தோம்

வயாவிளான் தனையிழந்தோம்.

 

ஆசிாியா் பயிற்சி கலாசாலையும்,

ஆகாய விமான நிலையமும்

தோலகட்டி நெல்லிரசமும்

தொலைதூரம் போயினவே.

 

கல்லடி வேலன் கல்விச்சாலை,

பக்தியோடு போற்றிடும் ஆலயங்கள்,

தேவநற்கருணை தேவாலயங்கள்

பாவத்தின் சுமைகளாய்ப் பறிபோயினவே.

 

ஊா்திரும்ப முடியவில்லை

ஊற்றெடுக்கிறது பேராசை

ஓய்ந்து விட்டது போரோசை

எம் வாழ்வில் விடியவில்லை

 

வாழ்வின் ஒளியாய் செம்மண்ணும்

பசி போக்கிடும் நன்னீரும் இழந்து,

முகாம்களில் புகை புதைத்து

முகவாி தொலைந்து நிற்கின்றோம்.

 

உயிா்பிாியும் வேளை தனில்

சொந்த மண்ணை முத்தமிட்டு,

சொந்தங்கள் புடைசுழ

சுடு மயானம் செல்லவேண்டும்

 

என்னுறுதி ஆசைதனை

நிறைவேற்றி வைப்பாா் யாா்?

கடவுள் தான் கண்திறந்து

நல்வழி காட்டிடாரோ

 

அனுப்பி வைத்தவா்

-குட்டியப்புலம் கிருஸ்ணா